உடன்குடி:
உடன்குடி பகுதியில் விவசாய விளை நிலங்களில் கடல் நீர் மட்டம் புகுந்து விடாமல் தடுக்க உடன்குடி தாங்கை குளத்தை முழுமையாக நிரப்பி கருமேனி ஆற்றில் தண்ணீர் விட வேண்டும் என்று நீண்டகாலமாக விவசாயிகள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உடன்குடி பகுதியில் தற்போது முருங்கை, தென்னை, பனை, வாழை, சப்போட்டா போன்ற விவசாய விளைபொருட்கள் பயிரிடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவசாய விளைநிலங்கள் அருகில் உள்ள கடல் நீர் மட்டம் விவசாய விளை நிலங்களில் புகுந்து விடாமல் தடுப்பது உடன்குடியில் உள்ள தாங்கை குளமும் கருமேனி ஆறும் ஆகும்.
இந்த வருடம் உடன்குடி பகுதியில் பருவமழை மிக மிக குறைவாகவே பெய்துள்ளது. தற்போது தாமிரபரணி ஆற்றில் இருந்து சடையநேரி கால்வாய் மூலம் தாங்கை குளத்திற்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. தாங்கைகுளம் முழுமையாக நிரம்பி மறுகால் பாய்ந்தால் தான் கருமேனி ஆற்றில் தண்ணீர் வரும். அதனால் முழுமையாக குளத்தை நிரப்பி ஆற்றில் தண்ணீர் விட்டால் தான் சுமார் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள தடுப்பு அணைகளில் தண்ணீர் தேங்கி விவசாய நிலங்களை பாதுகாக்கும் . அதனால் கருமேனி ஆற்றில் உடனடியாக தண்ணீர் விடவேண்டும் என்று விவசாயிகளும் வியாபாரிகளும். கிராம பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.