கைது 
செய்திகள்

வாழப்பாடி அருகே நாட்டுத்துப்பாக்கியுடன் விவசாயி கைது

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

வாழப்பாடி:

வாழப்பாடியை அடுத்த காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார், கொரோனா ஊரடங்கில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அனுப்பூர் மேலக்காடு பகுதியில் வாகன தணிக்கை செய்த போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பிச்செல்ல முயன்றார். அவரை மடக்கிப்பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அருநூற்றுமலை பள்ளிக்காடு கிராமத்தை சேர்ந்த கருப்பன் (49) என்பதும், அனுப்பூர் மேலக்காடு கிராமத்தில், குத்தகைக்கு நிலம் பிடித்து விவசாயம் செய்து வருவதும் தெரியவந்தது.

இவரது வாகனத்தை சோதனை செய்ததில், நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து விவசாயி கருப்பனை போலீசார் கைது செய்தனர்.