திருவள்ளுர்:
திருவள்ளூர் அருகே பூண்டி கிராமம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (49). இவர் பி.எஸ்.சி வரை படித்துள்ளார்.
இந்தநிலையில் பூண்டி பேருந்து நிலையத்தில் ஸ்ரீ மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வந்துள்ளார்.
மிகவும் பின்தங்கிய கிராமமான பூண்டியில் உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் மருந்து மாத்திரை தருவதை வாடிக்கையாக்கிய சீனிவாசன் காலப்போக்கில் தான் ஒரு மருத்துவர் என்று சொல்லி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து மருந்து மாத்திரை வழங்குவதுடன் ஊசியும் போட்டு வந்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத்துறையினரால் இவர் கைதும் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியே வந்த சீனிவாசன் மீண்டும் அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இதுகுறித்து பூண்டி கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் புல்லரம்பாக்கம் போலீசார் நேற்று போலி மருத்துவர் சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே சுகாதாரத்துறையினரால் கைது செய்யப்பட்ட இவர் மீண்டும் மருத்துவம் பார்ப்பதை சுகாதாரத்துறை கண்டுகொள்ளாததால் போலி மருத்துவர் தற்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.