போலி ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் ஆய்வு செய்தபோது எடுத்த படம் 
செய்திகள்

ரெயில் தண்டவாளத்தில் சிதறி கிடந்த போலி ரூபாய் நோட்டுகள்

கடைகளில் விற்பனை செய்யப்படும் குழந்தைகள் விளையாடுவதற்கான பொம்மை ரூபாய் நோட்டுகளுடன் ரெயில் தண்டவாளத்தில் கைப்பற்றப்பட்ட நோட்டுகள் ஒப்பிட்டுப்பார்க்கப்பட்டன.

மாலை மலர்

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் ரெயில்வே மேம்பாலத்தின் அருகே தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் நேற்று ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக சிதறிக் கிடப்பதாக தர்மபுரி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரத்தினகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் ரெயில்வே போலீசார் அந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 20 கட்டுகளுக்கு மேல் ரூ.2000, ரூ.500 நோட்டுகள் கிடந்தன.

அந்த நோட்டுகளை தர்மபுரி ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு போலீசார் எடுத்துவந்து ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது அவை போலி ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது.

கடைகளில் விற்பனை செய்யப்படும் குழந்தைகள் விளையாடுவதற்கான பொம்மை ரூபாய் நோட்டுகளுடன் ரெயில் தண்டவாளத்தில் கைப்பற்றப்பட்ட நோட்டுகள் ஒப்பிட்டுப்பார்க்கப்பட்டன. அப்போது ரெயில் தண்டவாளத்தில் கிடந்தவை குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் பொம்மை ரூபாய் நோட்டுகள் என்பது உறுதியானது.

அந்த பொம்மை ரூபாய் நோட்டுகளில் சில்ட்ரன்ஸ் ஆப் இந்தியா என்ற எழுத்துகளும், குழந்தைகளின் படங்களும் இடம் பெற்றிருந்தன. இந்த பொம்மை ரூபாய் நோட்டுகளை ரெயில் தண்டவாளத்தில் வீசிச் சென்றவர்கள் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ரெயிலில் செல்லும்போது ரூபாய் நோட்டு என நினைத்து இந்த நோட்டுகளை திருடியவர்கள் பின்னர் பொம்மை ரூபாய் நோட்டு என தெரிந்தபின் ரெயில் தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.