கோப்புபடம் 
செய்திகள்

ஏரல் அருகே மூதாட்டி கொலையில் 3 பேரை பிடித்து விசாரணை

ஏரல் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நெல்லை:

ஏரல் அருகே உள்ள வாழ வல்லான் மேலூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மனைவி முத்துக்கிளி (வயது 75).

இவர்களது 3 மகன்களும், 5 மகள்களும் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இதனால் கணவன்-மனைவி மட்டும் தனியாக வீட்டில் இருந்தனர்.

நேற்று அதிகாலை முத்துக்கிளி வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்மநபர்கள் அரிவாளால் முத்துக்கிளியை வெட்டிக்கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த 9½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். அவரது தலைமையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கணவன்-மனைவி 2 பேரும் வயதானவர்கள். மேலும் இருவரும் தனியாக வசித்து வந்ததால் நகைக்காக அவர்களை பற்றிய நன்கு தெரிந்த அப்பகுதியை சேர்ந்த யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு யாரும் இந்த கொலையை செய்திருக்கலாமா? என பல்வேறு கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 3 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். இன்றும் 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.