தற்கொலை 
செய்திகள்

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலன் வீட்டில் தஞ்சம் அடைந்த பள்ளி மாணவி தற்கொலை

எடப்பாடி அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலன் வீட்டில் தஞ்சம் அடைந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி - பூலாம்பட்டி சாலையில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 52). லாரி டிரைவர். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சண்முகத்தின் 3-வது மகளான மதுஸ்ரீ (17) அங்கு உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி அமைந்துள்ள மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவருடன் மாணவிக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பள்ளிக்கு செல்லும் வழியில் அடிக்கடி அந்த இளைஞருடன் மாணவி பேசி பழகி வந்தார்.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட காதலனுடன் மதுஸ்ரீ செல்போனில் அதிக நேரம் பேசி வந்துள்ளார். இதை அறிந்த பெற்றோர் அவரை கண்டித்ததுடன், படிக்கிற வயதில் காதல் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று தொடர்ந்து நீண்ட நேரமாக செல்போனில் பேசி வந்ததால் மதுஸ்ரீயை அவரது தாயார் கஸ்தூரி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுஸ்ரீ தனது வீட்டை விட்டு வேளியேறி, மேட்டுத்தெரு பகுதியில் உள்ள அவரது காதலன் வீட்டில் தஞ்சம் அடைந்தார். பெற்றோர், அங்கு சென்று மகளை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மதுஸ்ரீ, கோபத்துடன் தனியறையில் இருந்தார். நேற்று நள்ளிரவில் மதுஸ்ரீ வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதுஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT