கேரளாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி சிறுமி ஒருவரின் முத்தத்தை பெற்றுக்கொண்ட காட்சி. 
செய்திகள்

பொருளாதார சீரழிவு: பாரதீய ஜனதா- இடதுசாரிகள் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்க பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

நாட்டின் பொருளாதார நிலையும், கேரளத்தின் பொருளாதார நிலையும் மிகவும் மோசமாக உள்ளன. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, தவறான முறையில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. ஆகியவை முதலில் பொருளாதார வீழ்ச்சியை தொடங்கி வைத்தது.

அதன் பிறகு பொருளாதார ரீதியாக மத்தியஅரசு தொடர்ந்து மேற்கொண்ட தவறான நடவடிக்கைகள் நாட்டை வீழ்ச்சி பாதைக்கு அழைத்துச்சென்றன. கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக கூறி, சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அவை அனைத்தும் பெட்ரோல் ஊற்றாமல் காரை ஓட்ட முயற்சிப்பது போன்ற செயலாகும்.

நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்க பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். இதற்காக அரசு தனது செலவினத்தை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் அதிக பணம் புழங்கும் நிலை ஏற்படும்.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி இருந்தபோது, வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். அப்போது அது தேவையற்ற வேலை என்று எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா விமர்சித்தது. ஆனால் இப்போது அவர்களே அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு உள்ளனர்.

அந்த திட்டத்தின் மூலம் பொருளாதாரம் மேம்படும் என்பதை ஒப்புக்கொண்டு உள்ளனர். ஏழைகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக பணத்தை செலுத்துவதன் மூலமாகத்தான், அவர்களது வாங்கும் திறன் மேம்படும். இதன் மூலம் உற்பத்தி அதிகரிக்கும்.அதனுடைய தொடர் நிகழ்வாக வேலை வாய்ப்புகள் உருவாகும். பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.