சிறை கைதி 
செய்திகள்

தீபாவளி பண்டிகை- பரோலில் செல்ல அனுமதி கோரி திருச்சி சிறையில் 42 கைதிகள் மனு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரோலில் செல்ல அனுமதி கோரி திருச்சி சிறையில் 42 கைதிகள் மனு அளித்துள்ளனர்.

மாலை மலர்

திருச்சி:

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயுள் தண்டனை பெற்று பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் சிறையில் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆண்டுதோறும் தண்டனை கைதிகள் தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், பரோல் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பரோலில் செல்ல அனுமதி கோரி 42 கைதிகள் மனு அளித்துள்ளனர். இவர்களுடைய மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு பரோலில் செல்ல அனுமதி அளிக்கப்படும்.

வழக்கமாக தீபாவளி பண்டிகை காலத்தில் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் பரோலில் விடுவிக்கப்படுவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக பரோலில் செல்பவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் குறைந்த எண்ணிக்கையிலான கைதிகள் மட்டும் பரோலில் அனுப்பப்படுகிறார்கள். மேலும், பரோலில் சென்று வரும் கைதிகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்தன.