நிலக்கோட்டை:
திண்டுக்கல் அருகே காமலாபுரம் பகுதியில் நிலக்கோட்டையைச் சேர்ந்த சவரிமுத்து மனைவி சந்தான மேரி (வயது 41) பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பெண்கள் பழங்கள் வாங்கினர். ஒவ்வொரு பழங்களிலும் அதிக அளவு எடுத்துக் கொண்டு மொத்தம் ரூ.15,300-ஐ அவரிடம் கொடுத்தனர். அந்த பணத்தை வாங்கிப் பார்த்த சந்தான மேரி வித்தியாசமாக இருந்ததால் 2 பெண்களிடம் இது குறித்து கேட்டார்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை சிறை பிடித்து அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சக்திசூர்யா (33). பழனியைச் சேர்ந்த ரத்தினம் (43) என தெரிய வந்தது. அவர்கள் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.15,300-ஐ பறிமுதல் செய்தனர். இந்த கள்ள நோட்டுகளை அவர்கள் யாரிடம் இருந்து பெற்றனர்? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து அந்த பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரிய கடைகளில் கள்ள நோட்டுகளை கண்டு பிடிப்பதற்கு மிஷின்கள் இருக்கும். இது போன்ற சிறிய கடைகளில் மிஷின்கள் இருப்பதில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி கள்ள நோட்டை சுலபமாக புழக்கத்தில் விட்டு விடுகின்றனர். எனவே வியாபாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.