கோப்புபடம் 
செய்திகள்

கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை: காதலன் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்:

வடமதுரை அருகேயுள்ள தென்னம்பட்டி இந்திராநகரை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (வயது 22). இவர், வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்தார். அதே மில்லில் பழனி கோம்பைபட்டியை சேர்ந்த தங்கத்துரை (27) என்பவர் வேலை செய்தார். இதனால் ஏற்பட்ட பழக்கத்தால் 2 பேரும் காதலித்தனர். இதையடுத்து ஜெயஸ்ரீ தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, தங்கத்துரையிடம் தொடர்ந்து வலியுறுத்தியதாக தெரிகிறது.

அப்போது தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறி ஜெயஸ்ரீயை, தங்கத்துரை வாகரை பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு தங்கத்துரை தனது நண்பரான ஜெகநாதன் (27) என்பவருடன் சேர்ந்து ஜெயஸ்ரீயை, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் அவர்கள் ஜெயஸ்ரீயின் உடலை சாலையோரத்தில் போட்டு விட்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கத்துரை, ஜெகநாதன் ஆகியோரை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்காக கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவின்பேரில், திண்டுக்கல் சிறையில் இருந்த தங்கத்துரை, ஜெகநாதன் ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT