ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூரைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் அஜய் (வயது 22). இவர் சென்னையில் மளிகைக் கடையில் வேலை பார்த்து வந்தார். தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலையில் நாய் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த அஜயை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்
இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் குறுக்கே பாய்ந்ததால் வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இறந்த அஜயின் கண்களை அவரது பெற்றோர்கள் தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.