தர்மபுரி:
தர்மபுரியைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 25). இவர் பழைய தர்மபுரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்த மதுரையைச் சேர்ந்த இளம்பெண்ணும், ஜீவாவும் காதலித்து வந்தனர்.
இவர்கள் தர்மபுரியில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜீவா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜீவா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவாவை காதலித்த இளம்பெண், அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.