தர்மபுரியில் அரசு ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம். 
செய்திகள்

தர்மபுரியில் 2-வது நாளாக அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம் - 116 பேர் கைது

தர்மபுரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 116 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

தர்மபுரி:

அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் தர்மபுரி மாவட்டத்தில் தொடர் போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த நிலையில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் பழனியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணைத்தலைவர் இளவேனில் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். போராட்டக் குழுவினர் தர்மபுரி- சேலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், தொகுப்பூதிய செவிலியர்கள், கிராமப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், ஒப்பந்த ஊதியம் ஆகியவற்றை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட ஊதிய முறைகளை அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் அளிக்க வேண்டும். அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலிபணியிடங்களை நிரப்பி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வரும் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மறியலில் ஈடுபட்ட 95 பெண்கள் உள்பட 116 அரசு ஊழியர்களை தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர்.