சிவகிரி:
சிவகிரிக்கு மேற்கே சின்ன ஆவுடைப்பேரி கண்மாய் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை சார்ந்த வனப்பகுதியில் வன உயிரினங்களை வேட்டையாடுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிவகிரி ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் தெற்கு வனவர் பூவேந்தன், வனக்காப்பாளர் இமானுவேல் சுதாகர், அஜித், வனக்காவலர் செல்வராஜ், மணிகண்டன், வேட்டை தடுப்பு காவலர்கள் சுப்பிரமணியன், சரவணன் ஆகியோர் கண்மாய்க்கு மேற்கே மலை அடிவார பகுதிகளில் ரோந்து சென்றனர்.
இதற்கிடையே கண்மாய்க்கு மேற்கே தனியாருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் அனுமதியின்றி மின்வேலி அமைத்திருந்ததில் இரவு நேரத்தில் இரைதேடி வந்த ஆண் புள்ளிமான் ஒன்று சிக்கி இறந்து கிடந்தது. இதை சிவகிரி அண்ணா தெற்கு தெருவை சேர்ந்த கதிரவன் என்ற தவிடன் (வயது 35), அழகர் (65), சாமி (42,) முனியசாமி (35) காளிராஜ் (62) ஆகியோர் மின்வேலியில் சிக்கி இறந்த மானின் இறைச்சியை பங்குபோட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அவர்களை பிடிக்க சுற்றி வளைத்தனர். இவர்களில் காளிராஜ், அழகர் ஆகியோர் பிடிபட்டனர். மற்ற 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட காளிராஜ், அழகர் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்து சிவகிரி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து, அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் சிவகிரி கோர்ட்டில் நீதிபதி பிரியங்கா முன்னிலையில் ஆஜர்படுத்தி, தென்காசி ஜெயிலில் அடைத்தனர். தப்பி ஓடிய கதிரவன், சாமி, முனியசாமி ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.