சென்னை:
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, பகுதி நேரம், 2-ம் ஆண்டில் மாணவர்கள் சேருவதற்கு ஜூன் 25-ந்தேதி முதல் விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது.
https://tngptc.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப பதிவு நடைபெற்று வந்த நிலையில் அதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
தற்போது அதற்கான கால அவகாசம் ஜூலை 19-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் 2020-21-ம் ஆண்டு கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டும் 9-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும். பிற மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும்.
தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தின் நேரடி கட்டுப்பாட்டில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 18,120 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு உள்ளன.