செங்கோட்டை:
செங்கோட்டை பஸ்நிலையம் பின்புறம் அமைந்துள்ளது தட்டான் பத்துகுளம். 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் மூலம் சுமார் 17 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. தற்போது குளத்துக்கு வரும் தண்ணீர் முழுவதும் மடைகள் இல்லாத நிலையில் கரைகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் தேக்க வழியின்றி குளம் முழுவதும் செடி கொடிகள் முளைத்து உள்ளது.
மேலும் நகரின் சாக்கடை கழிவுகள், பஸ்நிலைய கழிவுகளும் கலந்து நோய் பரப்பும் இடமாக மாறி வருவதுடன் துர்நாற்றமும் வீசுகிறது.
இந்த குளத்தின் மூலம் பாசன வசதி பெற்று வரும் நிலங்கள் முழுவதும் கழிவு நீரிலேயே விவசாயம் செய்யும் சூழ்நிலை உருவாகி உள்ளது. விவசாயத்திற்காகவே குளங்கள் என்ற நிலை மாறி தற்போது கழிவு நீர் மற்றும் சாக்கடை நீரை தேக்கும் இடமாக மாறி இந்த தண்ணீரில் விவசாயம் செய்யும் போது நெற்கதிர்கள் உள்ளிட்ட விவசாய பயிர்கள் நோய்தாக்கும் அபாயத்தில் உள்ளதாகவும், விவசாய பணிகளை மேற்கொள்ளும்போது ஆபத்தான நோய்கிருமிகளால் தோள் நோய் ஏற்படுமோ எனவும் விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
இந்த நிலையில் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் விரக்தியில் விவசாயிகள் உள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி குளத்தினை விரைந்து சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.