கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே அவசியமாக இருப்பதால், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
சென்னையில் தினமும் சராசரியாக 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாநகராட்சியின் முகாம்கள் மூலம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
2-ம் அலை தாக்கம் அதிகரித்தபோது தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வமாக வந்தனர். அப்போது தடுப்பூசி தட்டுப்பாடாக இருந்ததால், குறைந்த அளவில் போடப்பட்டது. இதனால் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக சிறப்பு திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டது.
200 வார்டுகளிலும் வார்டுக்கு 2 முகாம்கள் வீதம் 400 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஒவ்வொரு வார்டிலும் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஒரு நிரந்தர முகாமும், மற்றொரு முகாம் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டது.
இன்று ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங்பேடி தலைமையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்தனர்.
சென்னையில் தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டதன் மூலம் பொதுமக்கள் அதிகளவு தடுப்பூசி செலுத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வார்டு பகுதியிலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி கமிஷனர் கேட்டுக்கொண்டுள்ளார்.
3-வது அலை தாக்கத்திற்கு முன்னதாக சென்னையில் அதிகபட்சமாக தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் படியுங்கள்...அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆஸ்பத்திரியில் அனுமதி