சென்னை:
தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.