சென்னையில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த 14 மாதங்களுக்கும் மேலாக கொரோனா நோய் தொற்று இருந்து வந்த போதிலும், இந்த ஆண்டு ஏப்ரலுக்கு பிறகு வீரியமான 2-வது அலையிலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த மாதம் கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக சென்னையில் நோய் பரவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலேயே இருந்தது. கடந்த மாதம் 12-ந் தேதிக்கு பிறகு கொரோனா வைரஸ் தமிழகத்தில் தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். அப்போது சென்னையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 7,500-க்கும் மேல் இருந்தது.
இதன் பிறகு ஒரு வாரத்துக்கு ஒரு நாளின் தாக்கம் சென்னையில் சீராக இருந்து வந்தது. கடந்த மாதம் 20-ந் தேதி வரையில் தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த எண்ணிக்கை 21-ந் தேதியில் இருந்து குறையத் தொடங்கியது. அதன் பிறகு தினசரி பாதிப்பு தமிழகம் முழுவதும் படிப்படியாக குறைந்தது. அந்த வகையில் சென்னையிலும் நோய் தொற்று சரிவை சந்தித்தது.
கொரோனா பரவல் தொடங்கிய நாளில் இருந்தே (கடந்த 14 மாதங்களுக்கு மேல்) சென்னையில் தான் அதிகளவில் பாதிப்பு இருந்து வந்தது. ஆனால் கடந்த ஒருவாரத்துக்கு முன்பு தினசரி பாதிப்பில் கோவை முதல் இடத்திற்கு சென்றது.
அங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. அந்த வகையில் கடந்த 3 நாட்களாக 2 ஆயிரத்து 500-க்கும் குறைவானவர்களே தினமும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று சென்னையில் தினசரி பாதிப்பு 2,062-ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... சென்னையில் ஒரு வாரமாக 3 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு
கடந்த மாதம்24-ந் தேதியன்று சென்னை முழுவதும் 765 தெருக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக இருந்து வந்தன.
இது கடந்த மாத இறுதியில் (மே 31-ந் தேதியன்று) 365 ஆக குறைந்தது. ஒரு தெருவில் 10 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அந்த தெருக்களையே சென்னை மாநகராட்சி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து வருகிறது.
அந்த வகையில் நோய் தொற்று பல இடங்களில் குறைந்துள்ளது. ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருக்கள் 6,200-ல் இருந்து 4,400-ஆக குறைந்து இருக்கிறது.
வட சென்னை பகுதிக்குட்பட்ட 1 முதல் 5 மண்டலங்களில் 58 சதவீதம் அளவுக்கும், மத்திய சென்னையில் உள்ள மண்டலத்துக்குட்பட்ட 6 முதல் 10 மண்டலங்களில் 56 சதவீதம் அளவுக்கும், தென் சென்னையில் உள்ள 11 முதல் 15 வரையிலான மண்டலங்களில் 34 சதவீதம் அளவுக்கும் நோய் தொற்று குறைந்து இருக்கிறது. மத்திய மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய நகரப்பகுதிகள் வருகின்றன. இங்கும் நோய் தொற்று குறைந்து வருகிறது.
சென்னையில் பல இடங்களில் நோயின் தாக்கம் குறைந்து இருக்கும் நிலையில் தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட பீமன்பேட்டை பகுதியில் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அங்குள்ள 123-வது வார்டில் 17 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.
இதையடுத்து அந்த பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள 53 வார்டுகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. 73 வார்டுகளில் ஒரே ஒரு நோய் கட்டுப்பாட்டு பகுதி மட்டுமே உள்ளது. அதுவும் அடுத்த சில தினங்களில் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.