திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உச்சம் தொட்ட கொரோனாவின் வேகம் மக்களை பெரிதும் அச்சுறுத்தியது. கடந்த 16-ந்தேதி தினசரி பாதிப்பு 1,569 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
இந்த பாதிப்பு சராசரியாக 1,500 என்ற அளவிலேயே நேற்று முன்தினம் வரை தொடர்ந்தது. நேற்றைய பாதிப்பு 1,271 ஆக குறைந்துள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
அதே நேரம் இறப்பு விகிதம் எகிறியுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்றைய தினம் 16 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதில் 28 வயது இளம்பெண் ஒருவரும், 34 வயது இளைஞர் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். இதுவரை திருச்சி மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 39 ஆயிரத்து 803 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,893 பேர் பூரண குணமடைந்து இல்லம் திரும்பியுள்ளனர். தற்போது தொடர் சிகிச்சையில் 8,542 பேர் உள்ளனர். இந்த தொடர் சிகிச்சையில் சில தினங்களுக்கு முன்பு 6,000 பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் தற்போது தொடர் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
சமீபகாலமாக உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதையே அதிகம் விரும்புகிறார்கள். ஆக்ஸிஜன் படுக்கைக்கு மக்கள் அலைவது தொடர்கதையாகவே இருக்கிறது.
திருச்சி மாநகராட்சி பகுதியில் நோய் கட்டுப்பாட்டு பகுதியை அதிகப்படுத்த ஆணையர் சிவசுப்பிரமணியம் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, திருச்சி மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டிய கொரோனா நோயாளிகள் தடை மீறி வெளியே வந்தால் ரூ.2000 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அங்குள்ள ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையை பொறுத்தமட்டில் ஆணையர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியும். திருச்சியில் கலெக்டர் தான் அபராதத் தொகை உயர்த்துவது தொடர்பாக முடிவு செய்வார்.
திருச்சியை பொறுத்தமட்டில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது காவல்துறை, பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக பாரபட்சம் இல்லாமல் கண்காணித்து அபராதம் விதித்து வருகின்றனர் என தெரிவித்தார்.