திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. இதனை மக்களின் கூடுதல் ஒத்துழைப்பாலும் சுகாதாரத்துறையினரின் தடுப்பு நடவடிக்கையாலும் தான் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.
இருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்றின் 2-ம் அலை தமிழகத்தில் மக்களை தொடர்ந்து அச்சத்தில் உறையச் செய்திருந்தது. இதையடுத்து 3-வது அலையும் வரும், ஆகவே பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
அதைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கொரோனா பரிசோதனை செய்ய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தினமும் நூண்ணுயிரியல் துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதுவும் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைவாக இருந்தாலும்கூட பரிசோதனையை 3-வது அலைக்காக துரிதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை நூண்ணுயிரியல் பிரிவு துறைத்தலைவர் டாக்டர். ஞானகுரு கூறியதாவது:-
தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவின் முதல் மற்றும் 2-வது அலை அதிவேகமாக பரவி அதிக மக்களை கொன்று குவித்தது. முதல் அலையின் போது அதிக பாதிப்புகள் ஏற்படவில்லை என்றாலும் 2-வது அலையில் அதிக உயிர்கள் கொரோனாவால் பறிபோனது. காரணம் என்னவென்றால் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டினார்கள்.
அப்போது அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்பட வாய்ப்பில்லாமல் இருந்ததால் இது போன்ற அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது. திருச்சி மாவட்டத்தை பொருத்தமட்டில் தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் சுமார் 0.8 சதவீதம் பேருக்கு தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. அவர்களும் விரைவில் குணமடைந்து வீட்டிற்கு செல்கின்றனர்.
இதுவரையில் அரசு மருத்துவமனையில் மட்டும் சுமார் 9 லட்சத்து 716 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் 10 லட்சம் பரிசோதனையை எட்டி விடும். அதற்குரிய நவீன எந்திரங்கள் அரசு தரப்பில் நம்முடைய ஆய்வகங்களுக்கு தரப்பட்டுள்ளது.
3-வது அலை குறித்து பொது மக்கள் அச்சப்பட வேண்டாம். அது செப்டம்பர் அல்லது நவம்பரில் வரும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி மக்கள் மத்தியில் தடுப்பூசி போடும் அவசியம் தெரிந்து அதிகமானோர் தடுப்பூசியை தங்கள் உடலில் செலுத்திவிட்டனர். அதனால் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரித்துள்ளது. இதேநிலை நீடித்தால் கொரோனாவின் 3-வது அலை வராமலேயே போகும் என்றார்.