கோப்புப்படம் 
செய்திகள்

சென்னையில் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா படுக்கைகள் காலியானது

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் சராசரியாக 270 என்ற அளவில் இருந்தது.

மாலை மலர்

சென்னை:

சென்னையில் கடந்த 3 வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு இந்த மாத தொடக்கத்தில் இருந்து மின்னல் வேகத்தில் அதிகரித்ததால் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர்.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் படுக்கைகள் முழுமையாக நிரம்பி இருந்ததால் ஆம்புலன்சில் வரும் நோயாளிகள் பல மணி நேரம் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே காத்திருக்கும் நிலை நீடித்தது.

இந்த நிலையில் கொரோனா நோயாளிகள் பெருமளவில் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் படுக்கைகள் காலியாக உள்ளன.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 250-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் வந்து கொண்டே இருந்தன. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில் ஆம்புலன்ஸ் சத்தம் ஆஸ்பத்திரியை சுற்றி எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும்.

தற்போது நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்சுகளின் எண்ணிக்கைகள் குறைந்து சத்தமும் அடங்கி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் சராசரியாக 270 என்ற அளவில் இருந்தது. தற்போது 100 பேர் வரையில்தான் தினமும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதே போன்று நோய் பாதிப்பு குறைவாக உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 700 பேர் தினமும் ஆஸ்பத்திரிக்கு வந்து சென்ற நிலையில் தற்போது இந்த எண்ணிக்கையும் 300 ஆக குறைந்து இருக்கிறது.

கொரோனா நோயாளிகள் வசதிக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி 3-வது டவர் கட்டிடத்தில் புதிய சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அங்கு அனைத்து படுக்கைகளும் காலியாகி உள்ளன.

தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதால் கொரோனா தாக்கம் குறைந்து நோயாளிகளின் எண்ணிக்கையும் சரிந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதே போல ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தினமும் 600 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 200 ஆக குறைந்துள்ளது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 200-ல் இருந்து 80 ஆக குறைந்து இருக்கிறது.

சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி அனைத்திலும் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.