பாபநாசம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம், அய்யம்பேட்டை, வங்காரம் பேட்டை, அரையபுரம், குப்பை மேடு, பெருங்குடி, நத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு ஒரு வாரம் காலமான நெற்பயிர்கள் தொடர் மழையால் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. சேதமடைந்த நெற்பயிர்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் காதர் உசேன், பாபநாசம் நகர செயலாளர் முரளிதரன், முன்னோடி விவசாயி கணேசன் ஆகியோர் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
அதில், ‘மழை தொடர்ந்தால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மூழ்க தொடங்கிவிடும் சம்ப நாற்றுகளும் அழுகும் நிலை ஏற்படும். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கடந்த ஆண்டு சம்பா சாகுபடியில் எதிர்பாராத பெருமழை காரணமாக ஏற்பட்ட மகசூல் இழப்பிற்கு பிரீமியம் தொகை செலுத்திய விவசாயிகளுக்கு இந்த வருடம் சம்பா சாகுபடி பணிகளை தொடங்கிய பிறகும் இழப்பீட்டு தொகை வழங்க படவில்லை. உடன் இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சம்பா சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவித்து சிங்க் சல்பேட், யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் போன்ற இடுபொருட்களை மானிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறி உள்ளனர்.