சேதம் அடைந்த வீட்டை படத்தில் காணலாம். 
செய்திகள்

வேப்பந்தட்டை தாலுகாவில் தொடர் மழை- 74 வீடுகள் இடிந்து சேதம்

வேப்பந்தட்டை தாலுகாவில் கடந்த 2 வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் 74 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து மண்ணில் நீர் பொங்கிய நிலையில் காணப்படுகிறது. பெரும்பாலான ஊர்களில் கூரை வீடுகளில் மண் சுவர்கள் நனைந்து உள்ளது. 

இந்நிலையில் வேப்பந்தட்டை தாலுகா பகுதி முழுவதிலும் கடந்த 3-ந் தேதி முதல் 74 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பசும்பலூரில் கடந்த வாரம் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 7 வயது பெண் குழந்தை இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தாலுகா முழுவதும் இடிந்து உள்ள வீடுகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்து வருவாய் துறையினர் தமிழக அரசுக்கு பட்டியல் அனுப்பி வருகின்றனர். மேலும் இடிந்த கூரை வீடுகளுக்கு ரூ.4 ஆயிரத்து 100-ம், ஓட்டு வீடுகளுக்கு ரூ.5 ஆயிரத்து 200-ம் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.