கல்லூரிகள் மாணவிகள் (கோப்புப்படம்) 
செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் திறந்த போதிலும் குறைந்த அளவில் மாணவர்கள் வருகை

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க், பி.டெக். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் இன்று வகுப்புகள் தொடங்கின. கல்லூரிக்கு மிகவும் குறைந்த அளவு தான் மாணவர்கள் வந்திருந்தனர்.

மாலை மலர்

சென்னை:

கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் 10 மாதமாக மூடப்பட்டன. மாணவர்கள் ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள்.

தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து இறுதி ஆண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. மற்ற மாணவர்கள் தொடர்ந்து வீடுகளில் இருந்தவாறு வகுப்புகளில் பங்கேற்று வந்தனர்.

இந்த நிலையில் கலை அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பம், என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இன்று முதல் வகுப்புகள் தொடங்கி உள்ளன.

முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் நேரடி வகுப்புக்கு சென்றனர். 10 மாதங்களுக்கு பிறகு கல்லூரி திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகம் அடைந்து காணப்பட்டனர். வகுப்பு அறையில் சக நண்பர்கள், தோழிகளை நேரில் சந்தித்து பேச முடியும் என்ற மகிழ்ச்சியில் சென்றனர்.

அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. காலை நேர வகுப்புகள் மற்றும் மாலை நேர வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் கொரோனா பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

கல்லூரி பஸ்களிலும், வேன்களிலும் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சென்ற அவர்கள் சக நண்பர்களிடம் தொட்டு பேசாமல் இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க், பி.டெக். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் இன்று வகுப்புகள் தொடங்கின. கல்லூரிக்கு வந்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. மிகவும் குறைந்த அளவு தான் வந்திருந்தனர்.