நெல்லை:
பாளை இந்திரா நகரை சேர்ந்தவர் சாமுவேல்ராஜ். கட்டிட ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர்.
இதில் கடைசி மகள் சுவிட்டா (வயது24) நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். கடந்த 21-ந்தேதி மாலையில் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சாமுவேல் ராஜ் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் இல்லாததால் பாளை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
நெல்லையை அடுத்த நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது42). இவரது இளைய மகள் கவுசல்யா நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக பாளையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 22-ந்தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்ற கவுசல்யா அதன் பின் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக மாரியம்மாள் பாளை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவை தேடி வருகிறார்கள்.