தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. நெல்லை, தென்காசி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன், தென்காசி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அருணா, மாவட்ட திட்ட இயக்குநர் சரவணன் ஆகியோர் டெங்கு குறித்து கருத்துரைகள் வழங்கினர்.
இதில் மாவட்டத்தை சேர்ந்த 5 நகராட்சிகள், 18 பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்களின் கமிஷனர்கள், செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை, உணவு பாதுகாப்புத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், உதவி இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்துதல், கொசு ஒழிப்பு மருந்து அடித்தல், ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாவட்டம் முழுவதும் ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து ஒட்டு மொத்த துப்புரவு பணி செய்தல், மருந்து கடைகளில் காய்ச்சல் கண்ட நோயாளிகளுக்கு மருத்துவர் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து வழங்குவதை தடை செய்தல்,
பிளாஸ்டிக் பயன்பாடுகளை தடை செய்தல், குடிநீர் பாதுகாப்பு நடவடிக்கை, மருத்துவமனைகளில் டெங்கு நோய் சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்தல், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் போன்ற தொடர் நடவடிக்கைகள் எடுக்குமாறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பின்னர் கலெக்டர் சமீரன் பேசியதாவது:-
பொதுமக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். டெங்கு நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகள், டிரம்கள், குடங்கள் ஆகியவற்றை வாரத்திற்கு ஒருமுறை தேய்த்து கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
வீடுகளை சுற்றி தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்காத வண்ணம் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகள் முழு அளவுள்ள சட்டை மற்றும் பேண்டுகள் அணிய வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள், மருந்துகடைகளில் மருந்து வாங்கி சாப்பிடகூடாது. டாக்டர்களிடம் முறையான சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.