காக்கவிளை சோதனை சாவடியில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு நடத்திய போது எடுத்த படம். 
செய்திகள்

கொரோனா பரவலையொட்டி குமரி-கேரள எல்லை சோதனை சாவடிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

குமரி-கேரள எல்லையில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என கூறினார்.

மாலை மலர்

களியக்காவிளை:

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த வெளிமாநிலங்களில் இருந்து குமரிக்கு வருகிறவர்கள் இ- பாஸ் பெற்றுதான் வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குமரி-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் ேநற்று குமரி-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். காக்கவிளை சோதனை சாவடிக்கு சென்ற அவர் அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் சுகாதார துறையினரிடம், ‘கேரளாவில் இருந்து வருகிறவர்கள் இ-பாஸ் பெற்றுள்ளார்களா? என்பதை கண்டறிந்து அவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய பின்புதான் மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 100 பேருக்காவது கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும்’ என ஆலோசனை வழங்கினார். அவருடன் கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் மற்றும் முன்சிறை வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார் உட்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் அரவிந்த் களியக்காவிளைக்கு சென்று அங்குள்ள சோதனை சாவடிகளில் ஆய்வு நடத்தினார். அப்போது கேரளாவில் இருந்து குமரிக்கு வருகிறவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும். அவர்கள் வெளியே வராமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் போதுமான அளவு நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 3 கொரோனா தடுப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு 400 முதல் 500 படுக்கைகள் தயாராக உள்ளது. தினமும் 3000 முதல் 4000 வரை தடுப்பூசிகள் போடப்படுகிறது. குமரியில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும்போது திருநெல்வேலி மண்டலத்தில் இருந்து பெறப்படுகிறது. போதிய தடுப்பூசிகள் பெற்று தட்டுப்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும். தடுப்பூசி விழிப்புணர்விற்காக சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு தனியார் பள்ளி, கல்லூரி மூலம் தடுப்பூசி போட ஆலோசிக்கபட்டது. நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் அதிக அளவு விரும்பி தடுப்பூசி போட முன் வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, கலெக்டர் பளுகல், நெட்டா உள்ளிட்ட சோதனை சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதுபோல் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.