கலெக்டர் மெகராஜ் 
செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் மெகராஜ் தகவல்

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்:

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை படிப்பு, பாலிடெக்னிக், தொழி்ற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று கல்வி நிலையங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை இனங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கும், கேட்புகளை சமர்ப்பிப்பதற்கும் வருகிற 31-ந் தேதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கால நிர்ணயத்துக்குள் சம்பந்தபட்ட கல்வி நிறுவனங்கள் எவ்வித விடுதலும் இன்றி புதுப்பித்தல் இனங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.