கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்) 
செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் இருந்து தஞ்சைக்கு வந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்- கலெக்டர்

லண்டன், ஐரோப்பிய நாடுகளில் இருந்து தஞ்சைக்கு வந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் கோவிந்தராவ் அறிவுறுத்தினார்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

கொரோனா பரவல் தமிழகத்தில் குறைந்துவரும் நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. மத்தியஅரசும் தடை விதித்துள்ளது. லண்டனில் இருந்து கடந்த 10 நாட்களுக்குள் தமிழகத்திற்கு வந்த பயணிகளை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்திற்கு யாராவது வந்து இருக்கிறார்களா? என அவர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்களே தாமாக முன்வந்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இங்கிலாந்து நாட்டில் புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இது கொரோனா வைரசின் புதிய வடிவமாக வெளிப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 10 நாட்களில் லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தஞ்சை மாவட்டத்திற்கு வந்தவர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மேலும் லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தஞ்சை மாவட்டத்திற்கு திரும்பியவர்கள் தங்களின் விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.