கொலை 
செய்திகள்

கோவையில் பிரபல ரவுடி கொலை- 3 பேர் போலீசில் சரண் அடைந்தனர்

கோவையில் பிரபல ரவுடி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை:

கோவை கணபதியை சேர்ந்தவர் ஜீவரத்தினம். இவரது மகன் கரண் என்கிற கரண்குமார் (வயது 23).

பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கரண்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலில் இருந்து வெளியே வந்து இருந்தார்.

நேற்று இரவு மது போதையில் இருந்த அவர் கணபதி மூகாம்பிகை நகரில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த முத்து கணேஷ், சீனிவாசன், ரவி சங்கர் ஆகியோர் ஆட்டோவில் வந்து கொண்டு இருந்தனர். இதனை பார்த்த கரண்குமார் ஆட்டோவை தடுத்து நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்தார். அவர்கள் தடுத்தும் அங்கு இருந்து செல்லாமல் தான் வைத்து இருந்த கத்தியால் 3 பேரையும் குத்த முயன்றார்.

இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து கரண்குமாரிடம் இருந்து கத்தியை பறித்து அவரை கீழே தள்ளி கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதில் படுகாயம் அடைந்த கரண்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் முத்து கணேஷ் ,சீனிவாசன், ரவி சங்கர் ஆகியோர் அங்கு இருந்த தப்பிச் சென்றனர்.

நள்ளிரவு வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த பிரபல ரவுடி கரண்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபல ரவுடி கரண்குமாரை கழுத்தை அறுத்து கொலை செய்த முத்து கணேஷ், சீனிவாசன், ரவி சங்கர் ஆகியோரை தேடி வந்தனர். இந்தநிலையில் 3 பேரும் இன்று அதிகாலை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் 3 பேரிடமும் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரபல ரவுடி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT