இளநீர் 
செய்திகள்

உடுமலையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இளநீர் ஏற்றுமதி

உடுமலை பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளுக்கு வியாபாரிகள் நேரடியாக வந்து இளநீரை வாங்கி லாரிகளில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.

மாலை மலர்

உடுமலை:

உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய், இளநீர் போன்றவை உள்ளூரில் மட்டுமல்லாமல் வியாபாரிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் சென்னை, மதுரை, திண்டுக்கல், கடலூர் போன்ற பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

தற்போது காலை, மாலை வேளைகளில் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டாலும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும் அதிகமாகவே உள்ளது.

இதனால் இளநீர் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுதவிர உடுமலையில் இருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் இளநீர் அனுப்பப்படுகிறது.

ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். இதனால் இளநீர் விற்பனை அதிக அளவில் அதிகரித்து காணப்படும்.

இங்கிருந்து இளநீர் அனுப்பினாலும், வெளி மாவட்ட வியாபாரிகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். தற்போது வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில் படிப்படியாக இளநீர் விற்பனை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் இளநீரிலுள்ள சத்துக்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால் காலை வேளையில் இளநீர் அருந்தும் பழக்கம் பலரிடம் உருவாகியுள்ளது. எனவே ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் அதிக அளவில் இளநீருக்கான ஆர்டர்கள் வருகிறது. இதனால் உடுமலை பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளுக்கு வியாபாரிகள் நேரடியாக வந்து இளநீரை வாங்கி லாரிகளில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.