தற்கொலை செய்துகொண்ட வேல்முருகன் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர் 
செய்திகள்

மதுரையில் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர் தற்கொலை

மதுரையில் கலெக்டர் அலுவலக மொட்டை மாடியில் தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மதுரை:

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தினமும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலையில் இருந்து மாலை வரை பணி செய்வது வழக்கம்.

நேற்று காலை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தற்காலிக தூய்மை பணியாளர் வேல் முருகன் (வயது 52) உள்பட 5 பேர் பணிக்கு வந்தனர்.

மாலை 5 மணிக்கு வேல் முருகனை தவிர மற்றவர்கள் பணி முடித்து சென்று விட்டனர். வேல்முருகன் சில நாட்கள் கலெக்டர் அலுவலகத்திலேயே தங்கி பணி செய்துவிட்டு காலையில் வீட்டுக்கு செல்வது வழக்கம்.

எனவே அவருடன் பணியாற்றியவர்கள் வேல் முருகன் பணி முடிந்து வராததை பெரிதாக கருதவில்லை.

இன்று காலை வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அலுவலகத்தின் மொட்டை மாடி பகுதியில் சுத்தப்படுத்தும் பணிக்கு சென்றனர். அப்போது வேல்முருகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்த்தனர். கட்டிடத்தின் மேல் தள பக்கவாட்டு சுவரில் தூக்கு போட்டு வேல்முருகன் தற்கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவருக்கு கிருஷ்ணபூச்சி என்ற மனைவியும், மகன் கதிரவன், மகள் ஜெயலட்சுமி உள்ளனர். மகன், மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

வேல்முருகன் தற்கொலைக்காக காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்னன.

கடந்த 7 ஆண்டுகளாக தற்காலிக தூய்மை பணியாளராக மாநகராட்சி அலுவலகத்தில் வேல் முருகன் பணியாற்றியுள்ளார். இதில் கடந்த 7 மாதமாக அவருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் வேல்முருகன் வறுமையில் வாடியுள்ளார். இதுபற்றி மனைவி கிருஷ்ணபூச்சியிடம் தெரிவித்து வேதனைப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்தான், வேலைக்கு வந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர் தற்கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.