குனியமுத்தூர்:
கோவை குனியமுத்தூரை சேர்ந்த 42 வயது தூய்மை பணியாளர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் கோவையில் உள்ள ஒரு அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல பணிக்கு சென்ற இவர் மிகுந்த மன அழுத்தத்துடன் வீட்டிற்கு திரும்பினார். வீட்டில் இருந்த அவர் திடீரென எலி மருந்தை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு தூய்மை பணியாளர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் தூய்மை பணியாளர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது செல்போனில் பதிவு செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில் வணக்கம் சார் நான் அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக வேலை செய்கிறேன். அரசு ஊழியர் தான். என்னை தற்போது வேலைக்கு வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
என்ன காரணம் என்றால் ஆஸ்பத்திரியில் உள்ள மெடிக்கலில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவரும், கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் இளம்பெண்ணும் ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு அறையில் தனிமையில் இருந்தனர். இதனை நான் பார்த்து விட்டேன் என்பதற்காக நான் செய்யாத குற்றத்தை செய்து விட்டதாக காரணம் காட்டி வெளியே அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு உடந்தையாக செவிலியர் ஒருவர் உள்ளார்.
நான் சம்பவத்தன்று அந்த இளம்பெண் உடை மாற்றும் போது நான் வீடியோ, போட்டோ எடுத்து விட்டேன். என்று எல்லோரிடமும் சொல்லி இவர்கள் 3 பேரும் சேர்ந்து நாடகமாடி என் மீது தப்பான புகார்களை கூறி என்னை வேலையை விட்டு போக சொல்கிறார்கள். அங்கு பணியாற்றக்கூடிய செவிலியர்கள் அனைவருக்கும் தெரியும் , என்னை பற்றி நீங்கள் வேண்டுமானால் விசாரித்து பாருங்கள் நான் தப்பான ஆள் எல்லாம் கிடையாது. நான் எந்த தப்பும் செய்யவில்லை. நான் தப்பு செய்து இருந்தேன் என்றால் என்னிடம் விசாரணை நடத்த வேண்டும். யாரும் விசாரணை நடத்தவில்லை. எனக்கும் மனைவி மற்றும் வயதுக்கு வந்த 2 குழந்தைகள் உள்ளனர்.
தேவையில்லாமல் நான் செய்யாத தப்பை நான் செய்ததாக கூறுவதால் நான் எப்படி வெளியே தலைகாட்ட முடியும். என்னுடைய குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய உள்ளது. நான் வேலைக்கு செல்வதற்கு கையெழுத்து போடுவதற்கு சென்றால் வேலைக்கு வராதீர்கள் என நாயை துரத்துவது போல என்னை துரத்தி எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள். என் சாவுக்கு காரணம் அந்த 3 பேர் தான். இவ்வாறு தூய்மை பணியாளர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பதிவு செய்த வீடியோவில் கூறி உள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தூய்மை பணியாளர் வெளிட்ட வீடியோவை கைபற்றி போலீசார் இது குறித்து சீதாலட்சுமி ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் வாலிபர், இளம்பெண் மற்றும் செவிலியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் கோவையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.