ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்தவர்கள் தனுஷ் (வயது16), ஸ்ரீஹரி (16), தருண் (15). 3 பேரும் பள்ளி மாணவர்கள். தனுஷ் ஸ்ரீஹரி இருவரும் மதனப்பள்ளி அருகே உள்ள நீர்க்கட்டு வாரி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும், தருண் மதனப்பள்ளியிலுள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்றிரவு 3 மாணவர்களும் டியூஷன் முடிந்து ஒரே பைக்கில் மதனப்பள்ளி நோக்கி வந்தனர். ஆரோக்கிய வரம் என்ற இடத்தில் வளைவில் வந்த போது எதிரே வந்த லாரியும் பைக்கும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவர்கள் 3 பேரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
3 பேரின் பெற்றோர்களும் விபத்து நடந்த இடத்திற்கு சென்று தங்களது பிள்ளைகள் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.