புதிய பூங்காவை கலெக்டர் மெகராஜ் திறந்து வைத்தார் 
செய்திகள்

நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியில் சிறுவர் பூங்கா- கலெக்டர் மெகராஜ் திறந்து வைத்தார்

நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை கலெக்டர் மெகராஜ் திறந்து வைத்தார்.

நாமக்கல்:

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டிசெட்டிப்பட்டி ஏரி புதர்மண்டி கிடந்தது. இதையடுத்து கே.பி.பி.பாஸ்கர் எல்.எல்.ஏ., தன்னார்வலர்கள் உதவியுடன் அந்த ஏரியை சுத்தம் செய்து, தூர்வாரும் பணியை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக தற்போது அந்த ஏரியில் பாதி அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில் கொண்டிசெட்டிப்பட்டி ஏரி கரையில் நாமக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா அமைத்தல், ஏரியின் இருபுறங்களிலும் கம்பி வலை வேலி அமைத்தல், நுழைவு வாயில் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டு உள்ள பூங்கா திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், முன்னாள் நகராட்சி துணை தலைவர் சேகர், ஒன்றியகுழு துணை தலைவர் ராஜா என்கிற செல்வகுமார், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் எஸ்.கே.வேல் மற்றும் அ.தி.மு.க.வினர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பூங்காவில் கலெக்டர் மெகராஜ் மரக்கன்றுகளை நட்டார்.

முன்னதாக கொண்டிசெட்டிப்பட்டி பிரிவு சாலை முதல் கொண்டிசெட்டிப்பட்டி ஏரி எல்லை வரை ரூ.1 கோடியே 54 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினை கலெக்டர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.