தஞ்சாவூர்:
தஞ்சை நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகள் தேவஸ்ரீ (வயது14). இவர் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு திருவள்ளுவர் மீது அதிக பற்று கொண்ட காரணத்தினால் திருக்குறளை சிறுவயது முதலே ஆர்வத்துடன் கற்றார். 1,330 திருக்குறளையும் முழுமையாக படித்து முடித்த இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தி 1,330 திருக்குறளையும் ஒப்பித்தார்.
மேலும் தனது வீட்டின் முன்பு உள்ள பலகையில் தினமும் ஒரு திருக்குறளை எழுதுவதுடன் அதன் விளக்கத்தையும் எழுதி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதன்காரணமாக தேவஸ்ரீ பல்வேறு பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.
இவரை பற்றிய செய்திகள் இணையதளத்தில் வெளியானது. இதை பார்த்த ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் சிலர், தேவஸ்ரீயை தொடர்பு கொண்டு தங்களது குழந்தைகளுக்கு திருக்குறள் பயிற்றுவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
ஏற்கனவே கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த தேவஸ்ரீ இணையதளம் மூலம் தினந்தோறும் திருக்குறள் வகுப்பை இலவசமாக நடத்த முடிவு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களின் குழந்தைகளான 13 வயதிற்குட்பட்ட மகிழினியா, பிரஷிதா, மாயா, நிவேதிதா, சர்வதாயினி, நித்தியஸ்ரீ, விகாஷ், கபிலேஷ், ஹர்ஷினி, நட்சத்திரா ஆகிய 10 பேர் ஆன்லைன் மூலம் திருக்குறளை கற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த திருக்குறள் வகுப்பு தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுநாள் வரை 34 அதிகாரங்கள் மூலம் 340 திருக்குறள்களை ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களின் குழந்தைகள் கற்றுள்ளனர். இந்த திருக்குறள் வகுப்பில் தாங்கள் பயின்ற திருக்குறளை சிறுமிகள் பிழையின்றி ஒப்புவிக்கின்றனர். மேலும் சிலர் தங்களது வீடுகளில் பலகையில் திருக்குறளை எழுதி விழிப்புணர்வும் ஏற்படுத்துகின்றனர்.
இது குறித்து தேவஸ்ரீ கூறும்போது, திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் ஆஸ்திரேலியா குழந்தைகளுக்கு கற்று கொடுத்து வருகிறேன். வாரத்திற்கு ஒரு அதிகாரம் வரை கற்று கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த திருக்குறளை அவர்கள் ஒப்புவிக்கும்போது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதேபோல் நிறைய நாடுகளுக்கு இந்த திருக்குறளை கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது கனவு என்றார்.
ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் கூறும்போது, திருக்குறளை எங்களது குழந்தைகள் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். எங்களுக்கு தமிழ் மேல் பற்று அதிகமாக உள்ளது. அதே தமிழ் பற்று எங்களது குழந்தைகளுக்கும் வர வேண்டும் என்பதற்காக திருக்குறளை கற்க ஆர்வம் ஊட்டி வருகிறோம். திருக்குறளை கற்பதன் மூலம் அவர்களுக்கு தமிழ் மீது ஒருவித பற்று தானாகவே வந்துவிடும். குழந்தைகளும் ஈடுபாட்டுடன் கற்று வருகின்றனர் என்றனர்.