குழந்தை மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் சிறப்பு வார்டில் ஒப்படைக்கப்பட்டது 
செய்திகள்

மதுரையில் மேலும் ஒரு குழந்தை மீட்பு

குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்ந்து மதுரையில் ஒரு வாரமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மதுரை:

மதுரை அருகே உள்ள கருப்பாயூரணி காவல் துறையினர் மூலம் சைல்டுலைன் அமைப்புக்கு தொலைபேசி மூலம் மதுரை-சிவகங்கை சாலை அரபிக் கல்லூரி அருகே குழந்தை கிடப்பதாக தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் சண்முகம், பாண்டியராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் கருப்பாயூரணி காவல்துறையினருடன் இணைந்து குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று குழந்தைகள் சிறப்பு வார்டில் சேர்த்தனர்.

மதுரையில் இதயம் அறக்கட்டளையினர் முறைகேடான வகையில் குழந்தைகளை விற்பனை செய்ததைத் தொடர்ந்து போலீசாரின் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும்பட்சத்தில் யாரேனும் சட்டத்துக்கு விரோதமாக குழந்தையை பெற்றவர்கள் போலீசுக்கு பயந்து இந்த குழந்தையை ரோட்டில் தூக்கி எறிந்து விட்டுச் சென்றார்களா என்று தெரியவில்லை.

குழந்தையை கடத்த முயற்சிக்கும் போது வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு பயந்து ரோட்டில் தூக்கி எறிந்து விட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்ந்து மதுரையில் ஒரு வாரமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

SCROLL FOR NEXT