புதுச்சேரி:
புதுச்சேரி குண்டுபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 31). எலக்ட்ரீசியன். இவரது மனைவி ராஜகுமாரி(27). இவர்களுக்கு கவுசிக்(6) என்ற மகனும், கோவர்ஷினி(2) என்ற மகளும் உள்ளனர். இவரது வீட்டின் எதிர்வீட்டில் வசித்து வருபவர் பழனிராஜ். தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவருக்கும், ராஜகுமாரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை முருகன் கண்டித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை கவுசிக் மட்டும் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தார். ராஜகுமாரியையும், அவரது மகள் கோவர்ஷினியையும் காணவில்லை.
இது குறித்து முருகன், கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், ‘தனது மனைவி ராஜகுமாரி மற்றும் குழந்தையை பழனிராஜ் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளது’ என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.