கோழிகள் 
செய்திகள்

கோழி தீவனம் விலை உயர்வால் சிக்கன் விலை உயர்வு

சென்னைக்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் கோழிகள் கொண்டு வரப்படுகிறது.

மாலை மலர்

சென்னை:

சென்னையில் சிக்கன் விலை திடீரென உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் 1 கிலோ சிக்கன் ரூ.220-க்கு விற்கப்பட்ட நிலையில் இப்போது ரூ.280-க்கு விலை உயர்ந்துள்ளது. சில கடைகளில் ரூ.260-க்கு விற்கிறார்கள்.

சென்னைக்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் கோழிகள் கொண்டு வரப்படுகிறது. இது தவிர ஆந்திராவில் இருந்தும் கோழிகள் விற்பனைக்கு வருகிறது.

சென்னையில் நிறைய கடைகளில் கடந்த வாரம் விற்பனை சரிந்திருந்த நிலையில் சிக்கன் ரூ.220-க்கு விற்கப்பட்டது. ஆனால் இப்போது மொத்த வியாபாரிகள் கோழி விலையை உயர்த்திவிட்டதாக கூறி ரூ.260-க்கு விற்பனை செய்கிறார்கள். சில கடைகளில் ரூ.280 வரை விற்கிறார்கள்.

இது பற்றி அடையார் பேபி புரோட்டின் உரிமையாளர் அடையார் துரை கூறுகையில், ‘‘கோழி தீவனம் 1 மூட்டை ரூ.1,600-ல் இருந்து ரூ.2,300 வரை விலை உயர்ந்துள்ளதால் மொத்த வியாபாரிகள் கோழி விலையை உயர்த்தியதாக தெரிவிக்கின்றனர். வரும் நாட்களில் இன்னும் விலை உயரும்’’ என்றும் தெரிவித்தார்.