மரணம் 
செய்திகள்

நண்பர்களுடன் சேர்ந்து கடலில் குளித்த கூலித்தொழிலாளி பலி

நண்பர்களுடன் சேர்ந்து கடலில் குளித்த கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

திருவல்லிக்கேணி புதிய கட்டத்தொட்டி தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 34). கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் 4 பேருடன் மெரினா கடற்கரைக்கு வந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மதுபோதையில் கலங்கரை விளக்கம் எதிரே கடலில் குளித்தார். அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கி திடீரென மாயமானார். இதை கண்ட அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மீனவர்கள், கடலில் இறங்கி அவரை தேடினர்.

சிறிது நேரம் கழித்து குணசேகரனை மீட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே நீரில் மூழ்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.