கைது 
செய்திகள்

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 250 பேர் கைது

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 250 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

புத்தாண்டையொட்டி சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 300 இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையை மேற்கொண்டனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 250 பேரையும், அதிவேகமாக வாகனங்களில் சென்ற 100 பேரையும் போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் விடுவிக்கப்பட்டனர். குடிபோதையில் அளவுக்கு மீறி போதையில் சென்ற 100 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேற்கண்ட தகவலை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கண்ணன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அதிகளவில் வெளியில் வரவில்லை. இதனால் விபத்துகள் அதிகளவில் நடக்கவில்லை என்று தெரிவித்தார். சென்னையில் புத்தாண்டு தினத்தில் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

2020 புத்தாண்டு விபத்தில் 9 பேரும், 2019-ம் ஆண்டு புத்தாண்டு அன்று நடந்த விபத்துகளில் 18 பேரும், 2018-ம் புத்தாண்டு விபத்தில் 10 பேரும் உயிரிழந்தனர் என்ற புள்ளி விவரங்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.