திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள இடுக்கி நெடுகுண்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது49). இவரை நிதி மோசடி வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் போலீசார் கைது செய்தனர். பின்பு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, பீருமேடு சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ராஜ்குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். போலீஸ் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்தபோது ராஜ்குமாரை தாக்கியதில் காயமடைந்திருந்த அவர் இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில் போலீஸ் விசாரணையின் போது, அவர் தாக்கப்பட்டதில் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் உள்பட 7பேர் மீது வழக்கு பதிந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
அவர்கள் தீவிர விசாரணை நடத்தி இந்த வழக்கில் தொடர்புடையாக கருதப்பட்ட மேலும் 2 போலீசார் மீது சி.பி.ஐ. வழக்கு பதிந்தது. உதவி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் சாபு, ரெஜிமோள், போலீஸ் டிரைவர்கள் நியாஸ்,சஜீவ் ஆண்டனி மற்றும் ஜேம்ஸ், ஏட்டு ஜிதின் ஜார்ஜ், ஜோய் வர்க்கீஸ், பிஜூ லூக்கோஸ், பெண் ஏட்டு கீது ஆகிய 9பேர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது.
அவர்கள் தீவிர விசாரணைக்கு பின் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், துணை போலீஸ் சூப்பிரண்டு சம்சு, ஜெயில் அதிகாரிகள், டாக்டர்கள்ஆகியோரிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
இந்த வழக்கு விசாரணை கொச்சி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்தநிலையில் போலீஸ் விசாரணையில் ராஜ்குமார் இறந்த வழக்கில் கொச்சி கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், டிரைவர்கள், ஏட்டுகள் உள்ளிட்ட 9பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.