நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி 
செய்திகள்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி

கொரோனா தடுப்பில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டதாலேயே உலக அரங்கில் இந்தியாவுக்கு நற்பெயர் கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 6-வது நிதி ஆயோக் கூட்டம் இன்று காலை காணொலி காட்சி மூலம் தொடங்கியது.

விவசாயம், உள்கட்டமைப்பு, உற்பத்தி, மனிதவள மேம்பாடு உள்ளிட்டவை குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:-

இந்தியாவின் வளர்ச்சியில் தனியார், கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றன. ஒருங்கிணைந்த செயல்பாடு ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படை ஆகும்.

இந்தியாவின் ‘சுயசார்பு இந்தியா திட்டம்’ உலகத்துக்கே உதவியாக இருக்க போகிறது. தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு நாம் பெரும் உதவி செய்ய வேண்டும்.

இளைஞர்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். நாட்டின் எண்ண ஓட்டத்தை தீர்மானிப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

மாநிலங்கள் இடையே மட்டுமின்றி மாவட்டங்கள் இடையேயும் வளர்ச்சிக்கான போட்டி இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இடையேயான கூட்டாட்சி முறை ஒத்துழைப்பே நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படையாக உள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். பொருளாதார முன்னேற்றத்துக்கு அரசுகள், தனியார் துறைக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும்.

2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு நேர்மறையான கருத்துக்கள் வந்துள்ளன. நாடு அதிவேகத்தில் வளர்ச்சிப் பாதையில் முன்னேற விரும்புவதை குறிக்கிறது.

சமையல் எண்ணெய் போன்ற விவசாய பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதன் மூலம் அவற்றின் இறக்குமதியை குறைக்க முடியும். விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் மூலம் இதை செய்ய முடியும். இறக்குமதிக்கு செலவிடப்படும் பணம் விவசாயிகளின் கணக்குகளுக்கு செல்லும்.

பழமையான சட்டங்களை மாற்றி அமைப்பதன் மூலம் இந்தியாவில் வணிகம் மேம்படுவதை எளிதாக்க முடியும்.

கொரோனா தடுப்பில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டதாலேயே உலக அரங்கில் இந்தியாவுக்கு நற்பெயர் கிடைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் வங்கி கணக்கு தொடங்குவோர், தடுப்பூசி மற்றும் சுகாதார வசதிகள் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுபோலவே இலவச மின் இணைப்பு, இலவச எரிவாயு இணைப்பு பெற்று ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒரு முன்னேற்றத்தையும் காண முடிகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.