சூயஸ் கால்வாயில் சிக்கி தவிக்கும் கப்பலை படத்தில் காணலாம் 
செய்திகள்

சூயஸ் கால்வாயில் சிக்கி தவிக்கும் கப்பல் - திருப்பூரில் ஆடை உற்பத்தி பாதிக்க வாய்ப்பு

மிகப்பெரிய சரக்கு கப்பலான எவர்கிரீன் சூயஸ் கால்வாயில் சிக்கியிருப்பதால் ஐரோப்பாவுடன் அதிக அளவில் வர்த்தக தொடர்பு வைத்துள்ள திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

திருப்பூர்:

திருப்பூரில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பனியன்கள் உள்ளிட்ட ஆடைகள் ஐரோப்பா நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் திருப்பூரின் ஆடை ஏற்றுமதி துறைக்கு, ஐரோப்பா மிக முக்கியமான சந்தையாக உள்ளது. ஆண்டுதோறும் அந்நாட்டு வர்த்தகர்களிடமிருந்து ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் திருப்பூர் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கிடைத்து வருகிறது.

ஆசியா-ஐரோப்பா இடையிலான கடல் வழி போக்குவரத்துக்கு சூயஸ் கால்வாய் முக்கியமான கடல் வழித்தடமாக உள்ளது. இந்தநிலையில் மிகப்பெரிய சரக்கு கப்பலான எவர்கிரீன் அங்கு மண்ணில் புதைந்துள்ளதால் சூயஸ் கால்வாய் அடைப்பட்டுள்ளது. இதனால் அந்த மார்க்கமான கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட கப்பல்கள் அங்கு காத்து கிடக்கின்றன.

கால்வாய்க்கு இருபுறம் உள்ள நாடுகளில் இருந்து சரக்குகள் செல்ல முடியாத நிலை தொடர்கிறது. தரை தட்டிய சரக்கு கப்பலை மீட்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

இது உலக வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளதால் அனைத்து நாடுகளின் பார்வையும் தற்போது சூயஸ்கால்வாய் பக்கம் திரும்பியுள்ளது. ஐரோப்பாவுடன் அதிக அளவில் வர்த்தக தொடர்பு வைத்துள்ள திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களும் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது:-

ஏற்கனவே கொரோனாவுக்கு பின் கண்டெய்னர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஆயத்த ஆடைகளை அனுப்ப உரிய காலத்தில் கண்டெய்னர் கிடைக்காமல் பின்னலாடை நிறுவனங்கள் தவித்து வருகின்றன. சூயஸ் கால்வாய் அடைப்பட்டுள்ளதால் உடனடி பாதிப்புகள் ஏதுமில்லை.

ஆனால் கப்பலை மீட்க தாமதம் ஏற்பட்டால், ஐரோப்பிய நாடுகளுக்காக தயாரிக்கப்பட்ட ஆயத்த ஆடைகளை அனுப்ப சிக்கல் ஏற்படும். சூயஸ் கால்வாயை தவிர்க்கும் பட்சத்தில் ஆப்பிரிக்காவை கடந்து தான், ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பல் செல்ல முடியும். இதனால் பயண காலம் அதிகரித்து சரக்கு கட்டணமும் உயர்ந்து விடும்.

இதுதவிர பல்வேறு வகை உபகரணங்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றை பெறுவதில் தாமதம் ஏற்பட்டு ஆடை உற்பத்தி பாதித்துவிடும்.கப்பல் விரைவில் அகற்றப்பட்டு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கிறோம் .இவ்வாறு அவர் கூறினார்.