சுரண்டை:
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அலி மகன் சேக் முகமது (வயது 34). இவர் உணவு பொருட்கள் ஏஜென்சி தொழில் செய்து வந்தார். தனக்கு சொந்தமான காரில் பொருட்களை கொண்டு சென்று கடைகளுக்கு சப்ளை செய்து வழக்கம்.
அதுபோல் நேற்று ஆலங்குளம் பகுதி கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்ய தனது காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் முகமது மீரான் (41) என்பவரும் சென்றார். கார் வீரகேரளம்புதூர் அருகே கலிங்கப்பட்டி விலக்கு அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே மணல் ஏற்றி ஒரு லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கார்-லாரி மோதியதாக கூறப்படுகிறது. இதில் கார் அப்பளமாக நொறுங்கியது. அதில் சேக் முகமது, முகமது மீரான் ஆகியோர் படுகாயங்களுடன் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வீரகேரளம்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொதுமக்கள் உதவியுடன் சேக் முகமது, அவருடன் வந்த முகமது மீரான் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேக் முகமது பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காஜாமுகைதீன், விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் ஜெயக்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து அகஸ்தியர்புரம் செல்லும் வழியில் உள்ள ஒரு பகுதியில் கட்டிடம் கட்டும் வேலை நடந்து வருகிறது. இதில் வேலை செய்வதற்காக கோபாலசமுத்திரம் பகுதியில் இருந்து சிலர் வந்தனர். நேற்று வேலையை முடித்துவிட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
டானா மெயின்ரோட்டில் வரும் போது எதிரே ஒரு ஆட்டோ வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதிக் கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வடக்கு கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி (49) என்பவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாயாண்டி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் தங்கத்துரை என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.