கைது 
செய்திகள்

நெல்லையில் கல்லூரி பெண் ஊழியரிடம் 20 பவுன் நகை மோசடி: கார் டிரைவர் கைது

நெல்லையில் பெண் ஊழியரிடம் 20 பவுன் நகை மோசடி செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:

நெல்லை பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்தவர் பீட்டர் சேவியர் (வயது 40). ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி சசிகலா. இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கல்லூரிக்கு தினமும் காரில் சென்று வந்தார். அந்த காரில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயக்குறிச்சியை சேர்ந்த சாமுவேல் அன்புராஜ் (21) என்பவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். அப்போது சாமுவேல் அன்புராஜ், தனது குடும்ப கஷ்டத்தை கூறி சசிகலாவிடம் பணம் கேட்டு உள்ளார். அப்போது சசிகலா பணம் இல்லை என்று கூறியதால், தங்க நகைகளை தருமாறும், விரைவில் அவற்றை திருப்பித்தந்து விடுவதாகவும் கூறிஉள்ளார். இதை நம்பிய சசிகலா 20 பவுன் தங்க நகைகளை அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் சாமுவேல் அன்புராஜ் குறிப்பிட்டபடி நகைகளை திருப்பி தரவில்லை.

இதையடுத்து பீட்டர் சேவியர், சாமுவேல் அன்புராஜிடம் தங்க நகைகளை திருப்பித்தருமாறு கேட்டார். அப்போது அவர் தங்க நகைகளை விற்பனை செய்து மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து பீட்டர் சேவியர் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சாமுவேல் அன்புராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.