கோப்புபடம் 
செய்திகள்

உத்தனப்பள்ளி அருகே மரத்தில் கார் மோதியது பெண் பலி - கணவர் மகன் படுகாயம்

உத்தனப்பள்ளி அருகே மரத்தில் கார் மோதியது. இதில் பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் கணவர்- மகன் படுகாயம் அடைந்தனர்.

மாலை மலர்

ராயக்கோட்டை:

திருப்பூரை சேர்ந்தவர் டைலர் யுவராஜ் (வயது 34). இவர், தன்னுடைய மனைவி சிந்து (28), 3 வயது மகன் அஸ்வின் பிரசாந்த் ஆகியோருடன் நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து ஓசூருக்கு காரில் வந்தனர்.

அதிகாலை 5 மணி அளவில் உத்தனப்பள்ளியை அடுத்த துப்புகானப்பள்ளி அருகே வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்ற மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

காரின் இடுபாடுகளுக்குள் சிக்கி டைலர் யுவராஜ், அவருடைய மனைவி, மகன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சிந்து பரிதாபமாக இறந்தார்.

டைலர் யுவராஜ், அவருடைய மகன் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.