வல்லம்:
நாமக்கல் மாவட்டம் பாண்டமங்களம் அருகே உள்ள கோப்பள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் விவேக். கோவில் பூசாரியான இவர் தனது மனைவி, 1½ வயது ஆண் குழந்தை தர்ஷன் மற்றும் உறவினர்களுடன் நேற்று அதிகாலை நாமக்கல்லில் இருந்து கும்பகோணத்திற்கு கோவிலுக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பாலம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவர் காரை திருப்ப முயன்று உள்ளார். அப்போது நிலை தடுமாறிய கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் விவேக், அவரது மனைவி, குழந்தை தர்ஷன் மற்றும் 3 பேர் காருக்குள் சிக்கி கொண்டனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை தர்ஷன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர் கூறினார். அப்போது குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
இதுகுறித்து விவேக் (வயது 30) கொடுத்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் கவிழ்ந்து 1½ வயது குழந்தை தர்ஷன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.