மாணவி மீது மோதிய கார் வீட்டிற்குள் புகுந்து நிற்பதை காணலாம். 
செய்திகள்

பல்லடம் அருகே கார் மோதி மாணவி பலி

பல்லடம் அருகே வீ்ட்டின் முன்பு விளையாடிய போது மாணவி மீது கார் மோதியது. இந்த விபத்தில் மாணவி பலியானார்.

மாலை மலர்

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கல்லம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி துளசிமணி. இவர்களுக்கு சாருகாசினி (வயது 10) என்ற மகளும், ஒரு கைக்குழந்தையும் உள்ளனர். இவர்களில் சாருகாசினி வீட்டருகே உள்ள அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். பழனிச்சாமியின் வீடு பல்லடம்-மங்கலம் சாலையின் ஓரமாக அமைந்துள்ளது.

தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால் நேற்று மாலை வீட்டின் முன்பு மாணவி சாருகாசினி விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது பல்லடத்தில் இருந்து மங்கலம் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அதி வேகத்தில் வந்த கார், திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த மாணவி சாருகாசினி மீது மோதியதோடு, வீட்டிற்குள் புகுந்தது. அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அலறியடித்து அந்த மாணவியை காப்பாற்ற அங்கு ஓடினார். ஆனால் பலத்த காயம் அடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள்.

இதுகுறித்து உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் யார்? உடன் இருந்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடத்தில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த மாணவி மீது கார் மோதி, மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.